காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால் காந்திபுரம் விரைவு பஸ் நிலையம் எதிரில் ம.தி.மு.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்.சேதுபதி, மு.கிருஷ்ணசாமி, வெள்ளிங்கிரி, முருகேசன், லூயிஸ், மு.ராமநாதன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.