MDMK Gen Secvaiko wrote letter to pm modi regards former issue
பருவமழை பொய்த்ததாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்ததாலும், வேளாண் செலவினங்களின் கடுமையான உயர்வு மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், தாங்க முடியாத மனவேதனையால், கடந்த 12 மாதங்களில் 400 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர்.
அய்யாக்கண்ணு தலைமையில், எந்தக் கட்சியையும் சாராத நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லிக்கு வந்து, இடுப்பில் அரையாடையுடன் கடந்த 14 நாள்களாக ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவும் பகலும் சாலையிலேயே படுத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து மடிந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து வந்துள்ளனர். திருச்சி நீதிமன்றதில் ஒரு முன்னணி வழக்குரைஞரான திரு அய்யாக்கண்ணு அவர்கள், தனது வழக்கறிஞர் தொழிலைத் துறந்துவிட்டு, கடந்த 17 ஆண்டுகளாக முழுநேரமும் விவசாயிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு வருகின்றார்.
தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியைச் சமாளிக்கத் தமிழக அரசு ரூ.39,565 கோடி நிதி உதவி கோரியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கின்ற விதத்தில், மத்திய அரசு வெறும் ரூ. 1658 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கின்றது. அதுவும், அடுத்த வேளாண்மைக்கான இடுபொருள்களை வழங்குவதற்காக மட்டுமே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் எனத் தாங்கள் வாக்குறுதி அளித்தீர்கள்.
தற்போது விவசாயிகள் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்;
1. நாட்டு உடைமை ஆக்கப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி.
2. வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு
3. உச்சநீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
4. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் அளித்த உறுதிமொழியின்படி, தென்னக நதிகள் இணைபிற்கான பணிகளை முன்னெடுத்தல்.
கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் வேதனைகளைத்தான் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற 200 விவசாயிகள் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விழைகின்றனர்.
தாங்கள் நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தால், தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.
மிக்க நன்றி.” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
