ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் போராட்டக்காரர்களுடன் நட்பாக பழகி அவர்களை அமைதியாக கலைந்து செல்லவைத்த எஸ்.பி மயில்வாகனனுக்கு பாராட்டு குவிகிறது. நீதிமன்றம் பாராட்டி உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ்சும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுதும் பெரிதாக வெடித்தது. மெரினாவில் கூடியது போலவே மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் பரவியது. சென்னை , மதுரை , கோவையில் பெரிய அளவில் பரவிய போராட்டம், திருச்சி , சேலம் , நெல்லை போன்ற நகரங்களில் பரவியது.

பல மாவட்டங்களில் போலீசார் போராட்டக்காரர்களிடையே மோதல் நிகழ்ந்தது. சில மாவட்டங்களில் போலீசார் திறமையாக கையாண்டனர். சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் திறம்பட கையாண்டாலும் கடைசி நாள் நிகழ்ந்த வன்முறை காரணமாக அவரது உழைப்பு வீணானது.

பெரம்பலூரில் , சிவகாசியில் போலீசார் போராட்டக்காரர்கள் கட்டிபிடித்து பிரியாவிடை பெற்று சென்றனர். திருச்சியில் உச்சகட்டமாக எஸ்.பி. மயில்வாகனன் மாணவர்களோடு மாணவராக , இளைஞர்களோடு இளைஞராக பழகி கண்டிப்பு கலந்த நட்புடன் பேசி கூட்டத்தை திறம்பட கொண்டு சென்று முடித்து வைத்ததில் நாடே அவரை பாராட்டியது.

எஸ்.பி மயில்வாகனனின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை உயர்ந்திமன்ற நீதிபதி மகாதேவன் நேரில் அழைத்து பாராட்டினார். பின்னர் தலைமை செயலகத்துக்கு அழைக்கப்பட்ட மயில்வாகனன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

அவரை கைகுலுக்கு பாராட்டிய ஓபிஎஸ் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

யார் இந்த மயில் வாகனன் ...

2009 பேட்ச் அதிகாரியான மயில்வாகனன் தென் காசி டிஎஸ்பியாக முதன்முதலில் பணியாற்றினார். நேர்மையான அதிகாரி. கைசுத்தம் உள்ளவர். ரவுடிகளுக்கு இவர் சிம்ம சொப்பனம். அவர் அந்த பகுதியில் உள்ள குற்றாலம் , தென்காசி , எலப்பூர் , ஆயக்குடி , புளியரை , தென்காசி உள்ளிட்ட 6 ஸ்டேஷன்களுக்கு பொறுப்பாக செயல்பட்டார்.

புளியரை கேரளா பார்டரில் உள்ள பகுதியாகும். இவர் இருக்கும் வரை கேரளாவிலிருந்து தமிழகத்துக்கோ , தமிழகத்திலிருந்து கேரளாவுக்கோ வெளியிலிருந்து எந்த ஒரு பொருளும் முறைகேடாக கடத்தப்பட்டதில்லை.

மாவட்ட எஸ்.பிக்க்கு கூட பயப்பட மாட்டார்கள் மயில்வாகனனை நினைத்தால் சமூக விரோதிகள் அஞ்சுவார்கள். அவர் விட்டுசென்ற பணியை அதன் பிறகு எட்டு ஆண்டுகளில் ஒரு அதிகாரி கூட செய்யவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

குற்றாலம் பகுதியில் ஒரு சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி அனைத்து காண்ட்ராக்டுகளையும் எடுத்து வந்தனர் அந்த சாம்ராஜ்யத்தை ஒழித்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு அரவிந்த் என்ற அதிகாரி தான் இவர் இடத்தை பூர்த்தி செய்தார். 

இண்ட் டிஐஜி டிஐஜியாக கண்ணப்பன் இருந்தபோது அவருக்கு கீழ் பணியாற்றியவர், இவரைப்போலவே கண்ணப்பனுக்கு கீழ் பணியாற்றிய மற்றொரு நேர்மையான அதிகாரி தான் அஸ்ரா கார்க் அவர் இப்போது சிபிஐக்கு சென்றுவிட்டார்.

 மயில் வாகனன் அதன் பின்னர் சென்னை மாதாவரம் துணை ஆணையராக இருந்தார். மேலதிகாரி ஒருவர் வாங்கும் மாமுல் பற்றி பத்திரிக்கைகளுக்கு சொன்னார் என்று இவர் மீது அவருக்கு கோபம். பின்னர் மயில்வாகனன் சென்னையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். 

திறமையான நேர்மையான அதிகாரிகள் எங்கிருந்தாலும் மின்னுவார்கள் என்பதற்கு மயில்வாகனன் , பாலகிருஷ்ணன் போன்றோர் சாட்சி. அடுத்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயம் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கம் கிடைக்க வாழ்த்துவோம்.