நாமக்கல்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. வாடிவாசல் திறந்தால்தான் கல்லூரி வாசலை மிதிப்போம் என்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த வருடம் தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைக்கும் என தமிழகம் முழுவதும் உள்ள சல்லிக்கட்டு வீரர்களும், தமிழ் மக்களும் பெரிதும் எதிர் பார்த்தனர். ஆனால், அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து மத்திய, மாநில அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் போட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் மூலம் கூடிய இளைஞர்கள் சல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் எனக் கோரியும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து நேற்று பரமத்திவேலூர் சிவா திரையரங்கு நான்கு சாலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு “நாட்டு மாடுகளை அழிக்க வேண்டாம். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க வேண்டாம். அலங்காநல்லூரில் சல்லிக்கட்டிற்காக போராடி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது, தாய்ப்பால் கொடுக்கும் பசுவை வதை செய்ய வேண்டாம். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலாளர்களை கண்டிக்கின்றோம்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பரமத்திவேலூரில் உள்ள தனியார் கல்லூரி, பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரி, கரூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், நாமக்கல் அடுத்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முன்பு மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் “பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும், வாடிவாசலைத் திறந்தால் தான் கல்லூரி வாசலை மிதிப்போம்” என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.