நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு, மருத்துவ படிப்பில் சேரமுடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த அனிதா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்தால், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

அனிதாவின் உடல், அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நேற்று தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மே 17 இயக்கத்தினர், சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் பங்கேற்றிருந்தார்.

தி.நகர் பாஜக அலுவலகத்துக்கு கடந்த 2 நாட்களாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தின்போது, இனிமேலும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அனிதாவின் மரணம் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.