Marxist Communist Party members arrested
கன்னியாகுமரி
தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி அண்ணாசிலை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. வி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என். முருகேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. மாதவன், என்.எஸ். கண்ணன், எம். அண்ணாதுரை, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். அந்தோணி, நாகர்கோவில் வட்டாரச் செயலாளர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேசமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து காவல் துறையினர், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். காவல் துறை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணத்தை வழங்கக் கோரியும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
எனினும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இதனால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு, தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வடசேரி அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கட்சியினரை காவல் துறை கைது செய்துள்ளது.
அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்த காவல் துறையினரை கட்சியின் மாவட்டக்குழு கண்டிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
