திருச்சியில் இன்று திருமணம் நடைபெற இருந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ் (வயது 31). இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மலைக்கோட்டை தாயுமானவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். 

இந்நிலையில் திடீரென மணமகன் காணாமல் போனது குறித்து குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. அவரை பல்வேறு இடங்களில் தேடியபோது தினேஷ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். 

இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் சம்மதத்துடனே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக இரு வீட்டாரும் கூறும் நிலையில், தினேஷ் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.