மெரினா கடற்கரை அழகு படுத்தும் திட்டம் என்ற பெயரில் பாரம்பரிய மீனவ மக்களின் பொது பயன்பாட்டு இடத்தை, அதிவிரைவு போக்குவரத்து 
சாலையாகவும்,  நொச்சிக்குப்பம் மீன் அங்காடியை அகற்ற முயற்சித்து வருகின்றனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் அங்குள்ள சிறு கடைகள் முறைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன.  

இந்நிலையில் மெரினாவில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக பொது பயன்பாட்டு இடம் நிறைய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்கள் மீன் விற்கவும், மீன் உணவுகள் விற்பனை செய்யவும் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தில் இந்த இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் தமிழக அரசு அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை அழகு படுத்தும் திட்டம் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த பகுதியை மீனவர்கள் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அவர்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தை அகலப்படுத்தி, அழகுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அங்கு அதிவிரைவு சாலை அமைக்கவும் அரசு முடிவெடுத்து உள்ளது.  

இந்நிலையில் கடைகள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 300-க்கும் மேறப்ட்ட பெண்கள் சாலை மறியல் போராடடத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.