mariappan should answer in satheeshkumar death case ordered high court
சதீஷ்குமார் என்பவரின் மரணம் தொடர்பான வழக்கில் விளையாட்டு வீரர் மாரியப்பன் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி மாரியப்பன் தனது நண்பருடன் புதிதாக வாங்கப்பட்ட காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரின் இருசக்கர வாகனம் மாரியப்பனின் கார் மீது மோதியது.
காரில் லேசாக கீறல் விழுந்ததாகவும் அப்போது மாரியப்பனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு நடந்த சிறிது நாட்களுக்குப் பிறகு ரயில் தண்டவாளம் அருகே சதீஷ்குமார் இறந்து கிடந்தார். கார் சேதமானதற்கு மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால்தான் தனது மகன் இறந்ததாகவும் அதனால் மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் சதீஷ்குமாரின் தாய் முனியம்மாள் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால், மாரியப்பன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யாததால், தனது மகனின் மரண வழக்கில் மாரியப்பன் பெயரை சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சதீஷ்குமாரின் தாய்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சதீஷ்குமாரின் மர்ம மரண வழக்கில் மாரியப்பன் பெயரையும் சேர்க்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் மாரியப்பனை எதிர்மனுதாரராக சேர்த்த உயர்நீதிமன்றம், நவம்பர் 11-ம் தேதிக்குள் அவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
