விருதுநகர்
 
மாரியம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது என்று 8 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி – விருதுநகர் பிரதான சாலையில் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. 130 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோயிலை அதேப் பகுதியில் வசித்து வரும் எட்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பராமரித்து வந்தனர். 

திருவிழாக்களை இந்த எட்டு சமுதாய மக்கள் முன்நின்று ஒற்றுமையாக நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கோயிலில் முறைகேடு நடப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதன்பேரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தலைமையில் கோயில் வரவு – செலவு கணக்குகளை கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையாளர் ஹரிஹரனை கோயில் செலவுகளை கண்காணிக்க அரசு நியமித்தது. அவர் தொடர்ந்து மூன்று மாதம் மாரியம்மன் கோயிலை கண்காணித்து உரிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் மாரியம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தப்போவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு எட்டு சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். 

இந்த நிலையில், நேற்று காலை எட்டு சமுதாய மக்களும், "மாரியம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது" என்பதை வலியுறுத்தி அம்மனிடம் மனு கொடுக்க இருப்பதாக தகவல் பரவியது. 

இதனைத் தொடர்ந்து கோயில் முன்பு காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். அப்போது எட்டு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோயிலின் உள்ளே அமர்ந்து கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். 

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு முடிந்தது. அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.