பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில்  சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர்  சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று  ஆஜராகினர்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தன்னுடைய சகோதரரின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு, சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் அரசுக்கு 1 கோடியே 78 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.

அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கௌதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, தில்லி சிபிஐ போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு 2016 டிசம்பர் 8 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, தெளிவான ஆவணங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.