Many people including Raghava Lawrence participated in anitha library function

அரியலூர்

நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காததால் கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் நினைவாக குழுமூரில் நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு நூலகத்திற்கான கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் ராகவா லாரன்ஸ் அந்த கூட்டத்தில் பேசியது, "சேலத்தில் சல்லிக்கட்டுக்காக உயிரைவிட்ட சகோதரர் லோகேஸ் அம்மாவுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுத்தேன். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று (அதாவது புதன்கிழமை) காலை நடைப்பெற்றது.

இதேபோல, நீட் தேர்வை கண்டித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவுக்கு ஒரு நூலகம் கட்டித் தர இங்கு வந்துள்ளேன்.

தேர்தலில் வாக்காளர்கள் இலவசங்களை நம்பி ஓட்டு போட வேண்டாம். தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை யார் இலவசமாகத் தருகிறார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குன்னம் அதிமுக எம்எல்ஏ.,ஆர்.டி. ராமசந்திரன், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்டச் செயலாளர் செல்வநம்பி,

திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் விடுதலை நீலமேகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாணவி அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிவண்ணன் உட்பட பலரும் பங்கேற்றனர்.