Mannargudi bank robbery 4 employees arrest

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, ஊழியர்கள் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துக்குமார், மீரான் மைதீன், மரிய செல்வம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கிக்கு கடந்த சில நாட்களுக்குமுன் மதியம் 2.30 மணி அளவில் வந்த 2 பேர், டிடி எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களிடம் கூறியுள்ளனர். மதிய உணவு இடைவேளை என்பதால் 3 மணிக்கு மேல்தான் டிடி எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வங்கியில் இருந்து வெளியேறிய இருவரும் அடுத்த சில நிமிடங்களில் மேலும் 3 பேரை அழைத்துக்கொண்டு வங்கிக்கு மீண்டும் வந்தனர். அதில், ஒருவர் வங்கி மேலாளர் கோவிந்தராஜனிடம் சென்று அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வங்கியில் உள்ள பணத்தை எடுக்கச் சொன்னார். மற்ற நால்வரும் வங்கியின் காசாளர் தியாகராஜனையும், எழுத்தர் கோடீஸ்வரனையும் தாக்கினர். மேலும், வங்கியின் லாக்கரை திறக்குமாறு மிரட்டினர்.

உடனே அவர்கள், லாக்கர் சாவியை கொடுத்தனர். ஆனால், அந்த சாவியைக் கொண்டு லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், லாக்கர் அறையில் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து, லாக்கரை திறந்து விடும்படி துப்பாக்கியைக் காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டினர்.

லாக்கரை திறந்தவுடன், நேற்று அடகு பிடிக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 80 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டனர். மேலும், பணம் வைக்கப்பட்டிருந்த கவுன்ட்டரை திறந்து அதிலிருந்த ரூ.6 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

வங்கியைவிட்டு வெளியே செல்லும்போது, வங்கிக்குள் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க் பகுதியை எடுத்துக்கொண்டு சென்றனர். கொள்ளையர்கள் சென்றபிறகு, வங்கியில் இருந்து வெளியே வந்த வங்கி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் சத்தம் போட்ட பிறகே, வங்கியில் கொள்ளை நடந்த விவரம் அருகிலுள்ள வீடுகளில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வங்கிக் கொள்ளையில் வங்கி ஊழியர்களே உடநதைதயாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முத்துக்குமார், மீரான் மைதீன், மரிய செல்வம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.