மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயின்ற 4ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியை உடைத்து காரை கவிழ்த்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி போலீசில் சரணடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி. பேட்டியளிக்கையில்: மாணவி பாலியல் சீண்டல் வழக்கு சம்மந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பட்டுள்ளனர். இதேபோல் பள்ளியில் இதுபோன்று மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் நடைபெறாமல் தடுத்திட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இது ஒரு சம்பவம்தான் நடைபெற்றுள்ளதாக வேறு ஏதேனும் குற்றட்சாட்டுகள் உள்ளதா என விசாரணையில் தெரியவரும் என்றார்.
