man hunt down rabbit with gun
வனத்தில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டையாட சுற்றித் திரிந்தவரை வனத்துறையினர் பிடித்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதனை வசூலும் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை வன அலுவலர் வசந்த பாஸ்கர், வனவர் வெங்கட்ராமன், வன காப்பாளர் குமார், உள்ளிட்ட குழுவினர், நேற்று அதிகாலை தண்டராம்பட்டு வனப்பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற ஒருவர், வனத்துறையினரை பார்த்தவுடன் தப்பிக்கும் முயற்சியில் ஓட்டம் பிடித்தார்.
சந்தேகமடைந்த வனத்துறையினர், அவரை துரத்திச் சென்று வளைத்துப் பிடித்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கொலமஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் (52) என்பதும், அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, முயல் வேட்டைக்குச் சென்றதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, ராமஜெயத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த அபராதத்தை வசூலும் செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வன அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
