ஆலந்தூரில் காய்கறி விற்ற பெண்ணிடம், ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் தள்ளுவண்டியில், ஒரு பெண் காய்க்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம், இந்த கடைக்கு ஒரு வடமாநில வாலிபர் சென்றார். கடையில் இருந்த காய்க்கறிகளை வாங்கி கொண்டு, அதற்கான பணமாக ரூ.1000 நோட்டை கொடுத்தார்.

அதை வாங்கிய பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ரூபாய் நோட்டை, அருகில் உள்ளவர்களிடம் கொடுத்து, “இது நல்ல நோட்டா” என கேட்டுள்ளார். இதை பார்த்ததும், அந்த வாலிபா, கையில் வைத்திருந்த காய்கறிகளை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து ஓடினார்.

உடனே உஷாரான பொதுமக்கள், அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். பின்னர், பரங்கிமலை போலீசில், அந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சரிபுல்லா(40) என தெரிந்தது. அவரிடம் உதவி கமிஷனர் ரவிசேகரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அப்பாதுரை மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் சரிபுல்லா, மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை வந்தார். ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் ஒரு குடிசை வீட்டில் தங்கியுள்ளார். அவருடன், அப்துல்வகாப் என்பவரும் தங்கி இருக்கிறார். கொல்கத்தாவில் செரீப் என்பவர் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டால் 100 ரூபாய் கமிஷனாக தருவார்.

இதற்காக, கடந்த வாரம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 200 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை சென்னையில் புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு வந்துள்ளார். இதில் கடந்த 4 நாட்களாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 4 மட்டும் மாற்றியுள்ளார்.

காய்கறி விற்ற பெண்ணிடம் மாற்றும்போது அவர் சந்தேகமாக பார்த்ததால் பயத்தில் தப்பியதில், சிக்கி கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.

சரிபுல்லா வைத்திருந்த ரூ.1.96 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 196 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார், சரிபுல்லா எத்தனை முறை சென்னை வந்து கள்ளநோட்டை மாற்றினார். இதுபோன்ற மேற்குவங்காள மாநில கள்ளநோட்டு கும்பல் தமிழகத்தில் வேறு எங்காவது தங்கி இருக்கிறதா? மற்றும் இதன் பின்னணி என்ன என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரிபுல்லா போலீசாரிடம் சிக்கியதை அறிந்ததும், அவருடன் தங்கியிருந்த அப்துல் வகாப் மாயமாகிவிட்டார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.