man arrested for who protest with children

சிவகங்கை

சிவகங்கையில், கடனுதவி கேட்டு பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரு குழந்தைகளுடன் போராட்டாத்தில் ஈடுபட்டவரை காவலாளர்கள் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், ஆ.தெக்கூரைச் சேர்ந்தவர் வி.பச்சையப்பன் (44). இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு மினி வேன் வாங்குவதற்காக தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பித்துள்ளார்.

இவரது கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட தாட்கோ நிர்வாகம் ஆ.தெக்கூர் பகுதியில் உள்ள வங்கியிலிருந்து கடனுதவி வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதன்பேரில், வி.பச்சையப்பன் அந்த வங்கி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, உரிய பதிலளிக்கவில்லை.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மறுபடியும் மனு அளிக்க வந்த வி.பச்சையப்பன், இதுவரை அளித்த மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தனது இரு குழந்தைகளுடன் அலுவலகம் முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளர்கள் அவரை கலைந்து செல்லுமாறு அறுவுறுத்தியும், அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே, காவலாளர்கள் அவரையும், அவரது இரு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.