திருநெல்வேலி

திருநெல்வேலியில் அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியவர் மற்றும் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரவவிட்டவர்கள் என ஐந்து பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது பிறந்த நாளன்று ஒரு கையால் அரிவாளை எடுத்து, மற்றொரு கையில் இருந்த கேக்கை வெட்டினார். அப்போது உடனிருந்த அவரது நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்தக் காட்சிகளை அருகிலிருந்த நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப்பில் பரவவிட்டனர். இந்தக் காட்சிகள் பெரும்பாலான செல்போன்களுக்கு பரவி கிளியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிவந்திபட்டி காவல் உதவி ஆய்வாளர் பிரதாப், சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இதுகுறித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். 

மேலும், ராமச்சந்திரன் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்தோணி, சுனில், வசந்த், பாலச்சந்திரன் ஆகிய ஐந்து பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னையில் பிரபல ரௌடி பினு தனது பிறந்தநாளை சக ரௌடிகளுடன் சேர்ந்து வாளால் கேக் வெட்டி கொண்டாடிய காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.