மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு, சிவபெருமான் - பார்வதி தேவியாரின் கோபமும், ஞானிகளின் சாபமும்தான் காரணம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இது அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.

தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீணை அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும், வழக்கம்போல் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தரலாம் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் கூறியிருந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் சிவபெருமான் - பார்வதி தேவியாரின் கோபமும், ஞானிகளின் சாபமும்தான் காரணம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: 

மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தீ விபத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய பேரரசி மங்கையற்கரசி அழைப்பின் பேரில் மதுரைக்கு எழுந்தருளி ஆதீனத்தை நிறுவி சைவ சமயத்தை நிலைநாட்டிய சீர்காழி தந்த திருஞான சம்பந்த பெருமான் நடனமாடிய, தரிசனம் செய்த வளாகம் மீனாட்சி அம்மன் ஆலயம்.

அக்காலத்தில் கட்டப்பட்ட தூண்களுக்கும், ஆயிரங்கால் மண்டபத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றால் சிவபெருமான் - பார்வதி தேவியாரின் கோபமும், ஞானிகளின் சாபமும் தான் இந்த தீ விபத்துக்கு காரணம். சைவ - வைணவ ஆலயங்கள் அறநிலைய துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில்களில் பணம் கொடுத்தால்தான் தரிசனம்.

பணம் கொடுத்து ரசீது வாங்கினால்தான் சன்னதி முன்பு நின்று தரிசனம். கோவில்களில் ஊழல் நிறைந்து விட்டதால் தரிசன கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்.

ஆலய நுழைவுவாயில் முதல் கருவறை வரை பணம் தான் பேசுகிறது. அறநிலையத் துறையில் பல்லாயிரக்கணக்கில் சம்பளம் வாங்கி வேலை செய்கிற இணை ஆணையர்கள், கண்ணியத்தோடு நடப்பது இல்லை. அவர்கள் வானத்தில் இருந்து பூமிக்கு குதித்தது போன்று நினைத்து வருகிறார்கள். ஆலயம் என்றால் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மடம் என்றால் என்ன? என்பது அவர்களுக்கு தெரியாது.

சைவம் என்றால் என்ன? வைணவம் என்றால் என்ன? என்பதும் அவர்களுக்கு தெரியாது. பக்தியும் இல்லாமல் அவர்களின் அணுகுமுறை இருக்கிறது. அறநிலையத்துறையில் பணியாற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு பயிற்சி வழங்க ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு சொல்லி இருக்கிறோம்.

பணம் ஒன்றையே குறிக்கோளாக கருதி ஆலயத்தில் பணி செய்பவர்கள் இனிமேல் தங்களை திருத்திக்கொண்டால் நல்லது. ஆலய வளாகங்களில் வணிகம், வியாபாரம் நடைபெற கூடாது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய பாதுகாப்புத்துறை இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. இந்த அறநிலையத்துறை கோயில்களுக்கு வேண்டியதே இல்லை. அதனை கலைத்து விட்டு கோயில்களை செல்வந்தர்களிடமும், மக்களிடமும் ஒப்படைக்க வேண்டும். அதற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.