உசிலம்பட்டி அருகே ஐந்தே நாட்களே ஆன பெண் சிசு சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்சிசுக்கொலை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் விவசாயக் கூலி மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌசல்யா மீண்டும் கர்ப்பமானார். கௌசல்யாவுக்கு கடந்த 21ஆம் தேதி பிரசவ வலி ஏற்படவே அருகிலுள்ள சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே பிறந்த வெறும் 5 நாட்களிலேயே பெண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 26 ஆம் தேதி இரவு உயிரிழந்ததாகவும் இதை யாரிடமும் கூறாமல் வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வாரவாரம் பரிசோதிக்க சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து இருந்து செவிலியர் வீடுவீடாக செல்வது வழக்கம். அப்படி சமீபத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டதாகவும் அதனால் பெற்றோரைக் குழந்தையைப் புதைத்து விட்டதாகவும் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூறியதாக சொல்லபடுகிறது. மேலும், முத்துப்பாண்டி வீடும் கடந்த சில் நாட்களாக பூட்டப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த செவிலியர், உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சேடபட்டி கிராம நிர்வாக அலுவலர் பிறந்த ஐந்து நாட்களிலேயே பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சேடபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் பெண்குழந்தையை கொலை செய்தார்களா அல்லது உடல்நலக்குறைவால் குழந்தை உயிரிழந்துள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணைக்காக போலீசார் சென்று பார்த்த போதும் முத்துப்பாண்டி வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து தலைமறைவான பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் குழந்தையைப் புதைத்தாக கூறப்படும் இடத்தில் பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் காந்தி முன்னிலையில் மதுரை அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் சிசுவின் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். புரத பரிசோதனை முடிவில் தான் பெண் சிசு இயற்கையாகவே இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்துத் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பெண் சிசு கொலையைத் தடுத்து நிறுத்த 'தொட்டில் குழந்தைகள் திட்டம்' என்ற திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனவும் இந்த பெண்குழந்தை மர்ம மரணம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்சிசுக்கொலை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
