நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில்33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் புகார் மனு அளித்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைதொடர்ந்து இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நடிகர் சங்க கட்டடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தது.

மேலும் நீதிபதிகள், ''நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என்று ஆய்வுக் குழுவின் வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

பின்னர் மனுதாரர் தரப்பில் 33 அடி சாலையில் தபால் நிலையம் இருந்தது பற்றிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போதிய அவகாசம் கொடுத்தும் மனுதாரர் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என கூறி தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

மேலும் இதுகுறித்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.