செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது.
இருப்பினும், மருத்து ஜாமீன் கோராமல் சாதாரண ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 2ஆவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 6 தொகுதிகள் கேட்கும் மதிமுக!
வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறையிடம் தற்போது எல்லா ஆதாரங்களும், எல்லா ஆவணங்களும் உள்ளன. ஆனாலும், இதே நிலையை அவர்கள் தொடர்ந்தால், உயர் பதவியில் இருக்கும் யாருக்கும் ஜாமீன் கிடைக்காது என செந்தில் பாலாஜி வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார்.
அதற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? அமைச்சர் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? கடைநிலை ஊழியர் 48 மணிநேர சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, சட்டம் அனைவருக்கும் சமம் தானே? ஒரு நீதிபதி கிரிமினல் வழக்கில் சிக்கினால், நீதிபதியாக இருக்க அனுமதிக்கலாமா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் 2ஆவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “நான் இங்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஒருமுறை இதே போன்ற காரணங்களுக்காக எந்த இலாக்காவும் ஒதுக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவர் தொடர்ந்து நீதிபதியாக இருந்தார். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். இருப்பினும், யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் அந்த நீதிபதி முன் ஆஜராகத் தேவையில்லை என்று எல்லோரிடமும் சொல்லப்பட்டது.” என்றார். அதாவது எந்த வழக்குகளும் அவர் முன்பு பட்டியலிடப்படவில்லை என அவர் கூறினார்.
மேலும், மனிதனாக ஜாமீன் கோருவதற்கு செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி தடையாக இருக்கக்கூடாது என்பதையும் இங்கு கூற விரும்புகிறேன் எனவும் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் தெரிவித்தார்.