தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்தது அதற்கு டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்ய அனுமதித்தாக எழுந்த புகார் தொடர்பாக திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணை அவசியம் என கருதுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தடை உள்ளது. கடந்தாண்டு சென்னை புறநகர் பகுதிகளில் சில குட்கா நிறுவனங்களில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையின்போது, அமைச்சர், அதிகாரிகளுக்கு குட்கா, பான்மசாலா விற்பனையை அனுமதிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது திமுக புகார் கூறியது.

இந்நிலையில் குட்கா விவகாரத்தில்  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என தோன்றுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

டிஜிபி, அமைச்சர் போன்றவர்கள் மீதாக புகார் என்பதால் இதை புறத் தள்ளிவிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.