கிருஷ்ணகிரி
 
கிருஷ்ணகிரியில், பெற்றோர்கள் தங்களது காதலை ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள மாதிநாயனப்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் அசோக் (19). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்

இதே பகுதியைச் சேர்ந்தவர் இலட்சுமணன் மகள் மாதவி (19). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

ஒரே கிராமத்தில் வசித்துவந்த அசோக்கும், மாதவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இது அவர்களது பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

தங்களின் காதலை பெற்றோர் ஏற்கமாட்டார்கள்  என்று எண்ணிய அசோக்கும், மாதவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு மாதிநாயனப்பள்ளியில் தங்கள் வீட்டு முன்பு அசோக்கும், மாதவியும் விஷம் குடித்தனர். 

இதனால் மயக்கம் அடைந்த இருவரையும் பார்த்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவகள் தெரிவித்தனர். உடனே இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 

இதுகுறித்து மகராஜகடை காவல் ஆய்வாளர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

பெற்றோர்கள் காதலை ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.