சென்னை எண்ணூர் அருகே தாழங்குப்பத்தை சேர்ந்தவர் ராமு. மீனவர். இவரது மகன் அன்பரசு (22) திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அலி. இவரது மகள் அமிருநிஷா (20).

இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்களின் விருப்பப்படியே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர். இதைதொடர்ந்து இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு அன்பரசு, அமிருநிஷா ஆகியோர் திருவொற்றியூரில் உள்ள நண்பரை சந்திக்க சென்றனர். பின்னர் அங்கிருந்து இரவு சுமார் 11 மணியளவில், காதலியை அவரது வீட்டில் விடுவதற்காக அன்பரசு, பைக்கில் அழைத்து சென்றார். அப்பர் சாமி கோயில் தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது, எண்ணூர் விரைவு சாலையில் திரும்பினர்.

அந்த நேரத்தில், துறைமுகம் நோக்கி அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி அமிருநிஷா சம்பவ இடத்திலேயே இறந்தார்.  உடனே லாரியை நிறுத்திய டிரைவர், அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அன்பரசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்பரசன் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும் லாரிகள் கட்டுபாடு இல்லாமல் போகின்றன. அதை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், பணத்தை வாங்கி கொண்டு விட்டுவிடுகின்றனர். இதனால், இதுபோன்ற விபத்து இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கிறது.

சென்னை துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கன்டெய்னர் லாரிகள், விதிகளை மீறி செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என கோஷமிட்டனர். மேலும், காதல்ஜோடி மட்டுமின்றி இந்த சாலையில் நடக்கும் அனைத்து விபத்துக்களுக்கும் போலீசாரே என கூறினர்.

அப்போது ஆவேசமடைந்த சிலர், விபத்து ஏற்படுத்திய லாரி அடித்து நொறுக்கினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால்,எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில், நேற்று நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.