கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்டபோது பெண் தர மறுத்த உறவினர்களின் தலையில் கட்டையால் அடித்த கொடூர காதலனை காவலாளர்கள் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேட்டைச் சேர்ந்தவர் கௌதம்ராஜ் (24). பி.ஏ. படித்துள்ள இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார் கௌதம்ராஜ். ஆனால், அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். 

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அவர் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனிடையே அந்த பெண்ணை பார்க்க முடியாமல் கௌதம்ராஜ் தவித்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின்  அக்கம்பக்கத்து வீட்டாரிடம் விசாரித்து விவரங்களை தெரிந்துக் கொண்டார்.

பின்னர் கௌதம்ராஜ் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது தாயாரிடம் கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால், பெண்ணின் பெற்றொருக்கும், கௌதம்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

வீட்டுக்குள் சத்தம் கேட்டதால் ஓடிவந்த உறவினர்கள் மூன்று பேர் கௌதம்ராஜை தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த கௌதம்ராஜ், அங்கிருந்த கட்டையை எடுத்து அவர்களின் தலையில் அடித்து காயப்படுத்தினார். மேலும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து வந்துவிட்டார். 

பின்னர், இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு காவலாளர்கள் வழக்குப்பதிந்து கௌதம்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.