திருப்பூர்

திருப்பூரில் படுவேகமாக லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே முள்ளிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் இரத்தினசாமி. இவர் நீலகிரி மாவட்டம், உதகைமண்டலத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

இரத்தினசாமியின் மனைவி வசந்தா. இவர்களின் மகன் ராஜேஷ் (25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வேலையை முடித்துவிட்டு ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில் நத்தக்காடையூரில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். காங்கேயம் பிரதான சாலையில் வெள்ளியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அவர் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தார். 

அப்போது, அந்த வழியாக காங்கேயத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி ஒன்று ராஜேஷின் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த காங்கேயம் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.