திருப்பூர்
 
திருப்பூரில் அசுர வேகத்தில் லாரியை ஓட்டிவந்து ஆம்புலன்ஸ் மீது மோதியதில் இருவர் உடல் நசுங்கி பலியானார்கள். ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

திருப்பூர் மாவட்டம், நல்லூர் பொன்முத்து நகரைச் சேர்ந்தவர் ஜோதிராஜ் (50). ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23-ஆம் தேதி சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை என்பதால், ஜோதிராஜை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிகையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்து ஜோதிராஜை ஒரு அவசர ஊர்தியில் ஏற்றிக்கொண்டு அம்பிளிகை நோக்கி நேற்றிரவு புறப்பட்டனர். 

அவசர ஊர்தியை முத்து என்பவர் ஓட்டினார். ஆம்புலன்சில் ஜோதிராஜின் மனைவி பிரியா (47), இவரின் தங்கை ஞானசெல்வம் (40) மற்றும் பிரியாவின் உறவினர்கள் ஜான்சி (40), ஜான்சியின் மகன் பெலிக்ஸ் (14), சங்கீதா(25) ஆகியோர் இருந்தனர்.

இந்த அவசர ஊர்தி திருப்பூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுக் கொண்டிருந்தது. 

அப்போது கோவையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நோக்கி லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. 

இந்த லாரி,  ஒட்டன்சத்திரம் - திருப்பூர் சாலை அவினாசிபாளையத்தில் இருந்து காங்கேயம் சாலையில் திரும்பியபோது அவசர ஊர்தி மீது லாரி அசுர வேகத்தில் மோதியது. 

இதில் அவசர ஊர்தி அப்பளம் போல நொறுங்கியது. இதனால் அவசர ஊர்தியில் இருந்த பிரியா மற்றும் ஞானசெல்வம் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 

மேலும், விபத்தில் ஜோதிராஜ், அவசர ஊர்தி ஓட்டுநர் முத்து, ஜான்சி, பெலிக்ஸ், சங்கீதா ஆகிய ஐவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதில் ஜான்சிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அவினாசிபாளையம் காவலாளர்கள் விரைந்து வந்து விபத்தில் பலியான பிரியா மற்றும் ஞானசெல்வம் ஆகியோரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த அவினாசிபாளையம் காவலாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவலாளார்கள் வலைவீசி  தேடி வருகின்றனர்.