lorry drivers and owners siege collector office and protest

விழுப்புரம்

அரசு மணல் குவாரியில் மணல் வழங்கப்படாததைக் கண்டித்து லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடிரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், சித்தாத்தூர் திருக்கை, வடக்குநெமிலி ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு லாரி மற்றும் மாட்டு வண்டிகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சித்தாத்தூர் திருக்கையில் செயல்படும் மணல் குவாரியில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சீபுரம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான லாரிகள் மணல் ஏற்ற வருகின்றன.

இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களாக இந்த குவாரியில் மணல் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் விழுப்புரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் ஏற்றிச் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. இதனால் மணல் ஏற்றிச்செல்ல வந்த லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடிநீர், உணவு ஏதும் கிடைக்காமல் ஆற்றிலேயே தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மணல் குவாரியில் உள்ள அதிகாரிகளிடம் சென்று மணல் எப்போது ஏற்றப்படும்? என்று கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லையாம்.. இதனால் சினமடைந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவு வாயிலை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா காவலாளர்கள் விரைந்து சென்று லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் ஐந்து பேரை மட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட அனுமதித்தனர்.

அதன்பேரில், அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். அப்போது, "எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மணல் விற்பனை நடைபெறாததால் வெளியூர்களில் இருந்து வந்து நான்கு நாட்களாக மிகவும் சிரமப்பட்டு கொண்டிருப்பதாகவும், மணல் விற்பனையை உடனே தொடங்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினர்.

அதனையேற்று நேற்று மதியம் 1 மணிக்கு மேல் சித்தாத்தூர் திருக்கையில் உள்ள அரசு மணல் குவாரியில் லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யும் பணி தொடங்கியது.