வேலூர் அருகே ராணிப்பேட்டையில் கார், லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தினர் திருப்பத்தூர் நோக்கி காரில் சென்றனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வன்னிவேடு அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிர் திசையில் பெங்களூரில் இருந்து, சரக்குகளை ஏற்றி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தறிக்கெட்டு ஓடியது. பின்னர், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, காரின் இடிபாடுகளில் இருந்த 2 பேரை மீட்டனர்.
இதற்கிடையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
