விழுப்புரம் 

விழுப்புரத்தில் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடர்வதால் ஓடாத லாரிகள் அனைத்தும் சாலையோரங்களில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்க ஆரம்பித்த பிறகு நாள்தோறும் அவற்றின் விலை அதிக ஏற்றத்தையும், குறைந்த இறக்கத்தையும் கண்டு வருகிறது. உயர்த்தும்போது 90 காசுகள் அளவில் உயர்த்துவதும், குறைக்கும் போது 9 காசுகள் அளவில் குறைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல் விலை 80 ரூபாயை கடந்து வரலாற்றில் காணாத அளவுக்கு விலை உயர்வை கண்டது. 

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு மனமில்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வைக் கண்டித்தும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக லாரி உரிமையாளர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்களால் விழுப்புரம் மாவட்டத்துக்கு பழனி, ஒட்டன்சத்திரம், பெங்களூருவிலிருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளது. 

அதேபோல விழுப்புரம் சந்தை குழுவில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், கம்பு, காராமணி, உளுந்து போன்ற விளைபொருட்களை கொண்டு செல்லமுடியாமல் வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மேலும், வணிக நிறுவனங்களுக்கு வர வேண்டிய சரக்குகள் வரவில்லை. இதனால் கடை வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி வரத்து ஓரிரு நாட்களில் முழுமையாக நிறுத்தப்படும் என்பதால் காய்கறி விலை உயர்வு எந்த அளவில் இருக்கும் என்று வியாபாரிகள் முதல் மக்கள் வரை கடும் அச்சத்தில் உள்ளனர். 

அதுமட்டுமின்றி செங்கல், மணலை லாரிகள் மூலம் கொண்டுசெல்ல முடியாததால் கட்டுமானப் பணிகளும் பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

லாரி உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக விழுப்புரத்தில் மட்டும் 60 சதவீத லாரிகள் ஓடவில்லை. இவையனைத்தும் சாலை ஓரங்களில் காற்று வாங்கி கொண்டிருக்கின்றன.