வழக்கு விசாரணைக்கு வரும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

வழக்கு விசாரணைக்கு வரும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் காவல் நிலையங்களில் ”லாக்-அப்” மரணத்தை தவிர்க்க, கைதானவர்களிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்த போலீசாருக்கு தடை விதித்து டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார். கைதானவர்களிடம் மாலைக்குள் விசாரணையை முடிக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக்கூடாது என விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு வரும் நபர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது. காவல் நிலைய துன்புறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தால், நீதிமன்றம் கண்மூடி இருக்காது. ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்' என உத்தரவிட்டார்.

இதற்கிடையே, சமீபத்தில் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் வாகன சோதனையின்போது கஞ்சா மற்றும் கத்தியுடன் பிடிபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவரும் வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த அடுத்தடுத்த மரணங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.