அரியலூர்

அரியலூரில் விபத்துகளைத் தடுக்க மாட்டு வண்டிகளுக்கும் ஒளிரும் வில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் க.இலட்சுமிபிரியா தொடக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சுப்புராயபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வருவாய் துறை சார்பில் மாட்டு வண்டிகளுக்கு ஒளிரும் வில்லைகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. இந்த பணியை தொடக்கி வைத்தார் ஆட்சியர் க.இலட்சுமிபிரியா.

அப்போது அவர் பேசியது: "அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத்  தவிர்க்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த் துறையின் சார்பில் மாட்டு வண்டிகளுக்கு முன்புறமும், பின்புறமும் ஒளிரும் வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றது.

அரியலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரியலூர், திருமானூர், நாகமங்கலம் மற்றும் ஏலாக்குறிச்சி ஆகிய குறுவட்டங்களில் உள்ள 344 மாட்டு  வண்டிகளுக்கும், செயங்கொண்டம் வட்டத்துக்கு உட்பட்ட செந்துறை, உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய குறுவட்டங்களில் உள்ள 1118 மாட்டு வண்டிகளுக்கும் பின்புறம் ஒளிரும் வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

மேலும், உடையார்பாளையத்தில் உள்ள 312 டிராக்டர்களுக்கும் முன்புறமும், பின்புறமும் ஒளிரும் வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் இதர டிராக்டர் மற்றும் வாகனங்களுக்கும் ஒளிரும் வில்லைகள் ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன்,கோட்டாட்சியர் மோகனராஜன், வட்டாட்சியர் முத்துலட்சுமி, வருவாய்த் துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.