திருவாரூர்

திருவாரூரில் கட்டப்பட்ட நூலகம் ஒன்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதால் ஆதங்கமடைந்த மக்கள் அதனை திறக்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் கடந்த 2007-08-ஆம் ஆண்டு அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் ஒன்று கட்டப்பட்டது.

இந்த நூலகத்தில் பல்வேறு நூல்கள், நாளிதழ்கள் வாங்கப்பட்டு வாசகர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இந்த நூலகம் பூட்டிய நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காட்சி அளிக்கிறது. இதனை தினமும் பார்த்து செல்லும் வாசகர்களும், மக்களும் தங்களின் வரிப்பணத்தை வீண்டிக்கிறார்களே என்று ஆதங்கப் படுகின்றனர். மேலும், அவர்கள் நூலகம் அல்ல, அறிவை விசாலமாக்கும் நூல்கள் பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகின்றனர்.

எனவே, நூலகத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி நூலகரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான ராமச்சந்திரன், "ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகத்துக்கென்று வரிவிதிக்கும் நிலையில், அங்குள்ள நூலகம் திறக்கப்படாமல் பூட்டிக்கிடப்பது கல்வியாளர்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. உடனே அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்.