நம்ம சுசீந்திரம் கோவில் கோபுரத்துல 1 லட்சம் சிற்பங்களா..? எரிக் சொல்லி தான் தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்து இருக்கும், சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்’ கோபுரத்தில் சுமார் 1 லட்சம் சிற்பங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ‘எரிக் சொல்ஹிம்’.
நமது தமிழகத்தில், குமரி மாவட்டத்திலேயே மிக புகழ் பெற்றுள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு இரண்டாயிரம் வருட காலத்திற்கும் முன்னாலேயே ஆரம்பமாகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும் மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவிலும் இது தான் என்பது கூடுதல் சிறப்பம்சம். இங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டு இருக்கிறது.
மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிறுதலைவர்கள், சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியாளர்கள், பிற்கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், தலைவர்கள், திருமலை நாயக்கர்கள், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.
வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவெங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் சாட்சியம் அளிக்கிறது. 1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும்.
வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகராட்சி காலத்தில் வித்தல மகாராஜாவால் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ் தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது.
முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார். அதனால் அது “நீலகண்ட விநாயகர்” என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று. ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமானை வணங்கிச் செல்லுவதாகக் கதை உண்டு.சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ‘சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்’ கோபுரத்தில் சுமார் 1 லட்சம் சிற்பங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ‘எரிக் சொல்ஹிம்’. எரிக் சொல்ஹிம் யாருன்னா இவர் ஒரு நார்வே அதிகாரி. இலங்கை தமிழருக்காகவும், அமைதிக்காகவும் பாடுபட்டவர். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நம்பமுடியாத இந்தியாவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் கோயிலின் கோபுரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. கடவுள், சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று தெரிகிறது’ என்று பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.