Like the developed countries the government should conduct educational institutions in Tamil Nadu - said Vasanthi Devi

திருச்சி

வளர்ச்சி அடைந்த நாடுகளில் கல்வி நிறுவனங்களை அரசே நடத்துவதுபோல தமிழகத்திலும் கல்வி நிறுவனங்களை அரசே நடத்த வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்.

தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்புச் சார்பில் ‘அரசு பள்ளிகளை பலப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடைப்பெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். இந்தக் கருத்தரங்கில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியது:

“தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவில் ‘ரேங்க்’ முறை ஒழிக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்குரியது. இதனை முதலாம் வகுப்பில் இருந்தே அமலுக்கு கொண்டு வரவேண்டும் என கல்வியாளர் என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தைகள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகள் புரிந்து படித்து அறிவை வளர்த்துக் கொள்ளும் கல்வி முறை வளர வேண்டும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் தனியார் பள்ளிகள் கிடையாது. கல்வி நிறுவனங்களை அரசு தான் ஏற்று நடத்துகின்றன. எனவே, தமிழகத்திலும் அதைப்போன்று அரசே கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும்.

‘ரேங்க்’ முறை ஒழிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளுக்கு இடையே உள்ள போட்டிக் குறைய வாய்ப்பு இருக்கிறது.

அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டதை ஒழிக்க வேண்டுமானால் தாய்மொழி கல்வி அவசியமாகும். தமிழை கட்டாயம் ஆக்கி விட்டு ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படிக்க ஏற்பாடு செய்யலாம்.

அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் விரும்பி சேர்க்கும் வகையில் அவற்றை பலப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை, மாநிலத் துணைத் தலைவர் கோபிநாதன், திருச்சி மண்டலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றுப் பேசினார்கள்.