Like last year you need to run school vehicles better without accident
திருப்பூர்
திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நடைபெற்றதில், கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் விபத்தில்லாமல் வாகனங்களை சிறப்பாக இயக்க வேண்டும் என்று ஆட்சியர் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படுகிற தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்களுக்கான ஆய்வு நேற்று நடைபெற்றது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், நடைப்பெற்ற இந்த வாகனங்களுக்கான ஆய்வை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“பள்ளி வாகன ஓட்டுநர்களை நம்பித்தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். நீங்கள் மிகவும் கவனமாக, எந்த விதமான ஒரு விபத்தும் நிகழாமல் வாகனங்களை நிதானமாக ஓட்டிச் சென்று குழந்தைகளை பள்ளிகளில் விட வேண்டும்.
அதேபோல மாலை நேரங்களில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் விபத்தில்லாமல் வாகனங்களை சிறப்பாக இயக்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.
பின்னர், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள 151 தனியார் பள்ளிகளை சேர்ந்த 812 வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 368 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தன.
அந்த வாகனங்களில் படிக்கட்டுகள், புத்தகப்பைகள் வைப்பதற்கு தேவையான இடங்கள், பக்கவாட்டு கண்ணாடி, பிரேக், முகப்பு விளக்குகள் உள்பட 16 வகையான ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டது.
இவையனைத்தும் சரியாக இருந்த 283 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கினர். 85 வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் அவற்றை சரி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அப்போது உதவி ஆட்சியர் ஷ்வரன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பழனிசாமி, அரசு பள்ளி ஆய்வாளர் ஆறுமுகம், திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிவகுருநாதன் (வடக்கு), முருகானந்தன் (தெற்கு) ஆகியோர் உடன் இருந்தனர்.
