குளமங்கலம் தெற்கு கிராமத்தில் இலேசாக தொடர்ந்து பெய்த மழையால், சில மாதங்களுக்கு முன்னர் அரசு போட்ட தார்ச் சாலைகள் உடைந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் தெற்கு ஊராட்சி சார்பில் பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோவில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அப்பகுதியில் ஓடும் மழைநீர் அருகில் உள்ள வில்லுனி ஆற்றுக்குள் செல்ல இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளதால் சாலை உடைந்து நாசமானது.
புதிய சாலையில் மழைநீர் சென்று உடைப்பு ஏற்பட்டு சாலை நாசமானதைக் கண்ட அக்கிராம மக்கள் அவசர அவசரமாக நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு மேலும் தண்ணீர் செல்வதால் இந்த சாலை உடைந்து வருகிறது.
இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் முழு சாலையும் உடைந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவே மழைநீர் காட்டாறுக்கு செல்லும் வகையில் சாலையின் குறுக்கில் பாலம் அமைத்தால் சாலை உடைப்பை தடுக்கலாம் என கிராமமக்கள் தெரிவித்தனர்.
