கோயம்புத்தூர்

வால்பாறை காட்டுப் பகுதியில் இருந்து சிறுத்தைப் புலிகள், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து உல்லாசமாய் சுற்றித் திரிவதால் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் மக்கள் அச்சத்தில் தலை தெறிக்க ஓடுகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை காட்டுப் பகுதியில் புலி, சிறுத்தைப் புலிகள், காட்டு எருமைகள், யானைகள், செந்நாய்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

இந்த காட்டு விலங்குகளில் சிறுத்தைப் புலிகள் அடிக்கடி காமராஜ்நகர், துளசிங்கநகர், கூட்டுறவு காலனி, எம்ஜிஆர்நகர், அண்ணாநகர், வாழைத்தோட்டம், திருவள்ளுவர் நகர், கக்கன்காலனி உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் அலைந்து திரிகின்றன.

இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள் சிறுத்தைப் புலிகளை பார்த்து அச்சத்தில் தெறித்து ஓடுகின்றனர். சிறுத்தைப் புலி நடமாட்டத்தால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அழையா விருந்தாளிகளாய் நுழைந்து விடுகின்றன சிறுத்தைப்புலிகள். பின்னர், வீட்டில் கட்டிப் போட்டுள்ள ஆடு, மாடுகளை உண்டு விருந்தாக்கிக் கொள்கின்றன. சத்தம் கேட்டு மக்கள் திரண்டு வந்தால் அவைகள் சென்று விடுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

“வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளை ஓட்டி வனப்பகுதி காணப்படுவதால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைப் புலிகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் சவரங்காடு எஸ்டேட் பகுதியில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு சிறுத்தைப்புலி சுற்றி திரிந்து இருக்கிறது. இரவு வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் அதை பார்த்து பீதி அடைந்து உள்ளனர்.

இந்த தகவல் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் பரவியது. இதனால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல மக்கள் பயப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சிறுத்தைப்புலி தாக்கி 11 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் தொடங்கி இருப்பதால் வால்பாறை பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் சிறுத்தைப் புலிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும்” என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.