கரூர்

கரூரில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் 37 உறுதிமொழிகள் மீது ஆய்வு நடைப்பெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ராஜா சங்ககிரி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். 

இதில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு உறுப்பினர்களான திருப்பூர் (தெற்கு) எம்.எல்.ஏ. குணசேகரன், திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், திரு.வி.க.நகர் (சென்னை) எம்.எல்.ஏ. சிவகுமார் என்கிற தாயகம் கவி, மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் என்கிற செல்வம், திருக்கோயிலூர் எம்.எல்.ஏ. பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கரூர் மாவட்டம் சார்ந்த உறுதிமொழிகளான மாயனூரில் செயல்பட்டு வந்த ஆஸ்பெடாஸ் தொழிற்சாலை பணி, நொய்யல் ஆற்றில் ஆறு மாதம் காளிங்கராயன் வாய்க்கால் நீரின் அளவு தன்மையை தொடர்ந்து கண்காணித்தல், 

நொய்யல் ஆற்றுப்பாசன பகுதியில் சாயக்கழிவு நீரினால் மாசுபட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வனத்தோட்ட கூழ்மரக்கன்றுகளை நடவு செய்தல், ஐயர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைப்பகுதிக்கு ரோப்கார் வசதி செய்தல், 

பயணிகள் நிழற்கூடம், கழிப்பறை, குடிநீர் வசதி, கடைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் அமைத்தல், கிருஷ்ணராயபுரம் வட்டம் சங்கமலைப்பட்டியில் 230 கிலோ துணை மின் நிலையம் அமைத்தல், 

கரூரில் கூட்டு உள்ளூர் திட்டக்குழு அலுவலகம் அமைக்கும் பணி, கரூரில் ஆயுத படைக்கென தனியாக நிர்வாக அலுவலகம் கட்டும் பணி, குளித்தலை, மஞ்சம்பட்டி, கொட்டியாம்பட்டி, மேலமேட்டுப்பட்டி, சங்காய்ப்பட்டி, 

தோகைமலை, நெசவாளர் காலனி, பிள்ளை கோடங்கிபட்டி, கம்பந்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட 37 உறுதிமொழிகள் மீது ஆய்வுக்குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் உறுதிமொழிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விடவும் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உரிய துறையினரிடம் ஆலோசனை கொடுத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியது: "நிதிக்குழு, மனுக்கள் குழு, கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, உறுதிமொழிக்குழு என 12 வகையான தமிழ்நாடு அரசு சட்டமன்றப்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் தமிழ்நாடு அரசு உறுதிமொழிக்குழுவால் நம் மாவட்டத்தில் உள்ள 37 உறுதிமொழிகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று செயல்பாட்டிலுள்ளது. மீதமுள்ள பணிகளும் உறுதிமொழிக் குழுவின் ஆலோசனைக்கு இணங்க விரைந்து முடிக்கப்படும்" என்று அவர் பேசினார்.