பெரம்பலூர்

சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கும் பொதுமக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் ஆட்சியர் எச்சரித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் நிகழும் பிறப்பு -  இறப்பு மற்றும் தத்து குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களை உடனடியாக பெற, தங்கள் பதிவுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

பிறப்பு - இறப்பு நிகழ்வுகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் (குழந்தை பெயர் இல்லாமல்) மற்றும் இறப்பு சான்றிதழை பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்து இலவசமாக பெற்று கொள்ளலாம். பிறப்பு-  இறப்பு சான்றிதழ் நகல் பெற ஒன்றுக்கு தலா ரூ.200 வீதம் செலுத்த வேண்டும்.

மேலும், அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் பி.ஐ.சி.எம்.இ. எண் பெற்றிருந்தால் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் பெற இயலும். பிறப்பு -  இறப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்து சான்று பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், குழந்தை இல்லாத பெற்றோர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்தோ அல்லது உறவினரிடம் இருந்தோ குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ளலாம்.

தத்து கொடுப்பவர்களும், தத்து எடுப்பவர்களும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டால் போதுமானதாகும்.

பிறப்பு சான்றிதழில் தத்து என்ற வார்த்தை இன்றி பிறப்பு சான்று வழங்கப்படும்.

பொதுமக்கள் சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அதில் எச்சரித்துள்ளார். ​