Lavanya boyfriend suicide attempt
கல்லூரிக்குச் சென்றபோது காதலன் வழிமறித்துக் கழுத்தை அறுத்தபோது ரத்தக் காயத்துடன் இருந்த மாணவி லாவண்யா அவர் விஷம் குடித்திருக்கிறார். அவரைக் காப்பாற்றுங்கள்” காதலனைக் காப்பற்றக் கூறியுள்ளார் அந்த மாணவி லாவண்யா.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்எஸ்சி, அக்ரி இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவி லாவண்யா இன்று காலை 10.30 மணி அளவில் விடுதியிலிருந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞர் திடீரெனக் கையில் வைத்திருந்த சிறு கத்தியால் கழுத்து, கை என ஏழு இடங்களில் கிழித்துள்ளார். இதில் மயக்க நிலையில் மாணவி ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்துவிட்டார்.
இதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சக மாணவர்கள் கோபத்துடன் ஓடிவந்து மாணவியைக் கத்தியால் கிழித்த இளைஞரைப் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையில் ஒப்படைத்தார்கள். மயக்க நிலையில் இருந்த மாணவி லாவண்யா தைரியமாக எழுந்து மாணவர்கள் உதவியோடு ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். தற்போது லாவண்யா சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் நவீன்குமார் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தனது உயிருக்கு உயிராக காதலித்த காதலியின் கழுத்தை அறுக்கும் அளவுக்கு என்ன கோவம் என்று விசாரிக்கையில் இந்த தகவல்கள் சிக்கியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளிக்கு அருகில் உள்ள கதம்பம்பட்டியைச் சேர்ந்தவர் மாணவி லாவண்யா. கழுத்தை அறுத்த நவீன்குமாரும் அதே ஊரைச் சேர்ந்தவர். பி.ஈ. முடித்துவிட்டு சென்னை அறன் சைபர் டெக் நிறுவனத்தில் டெவலப்மெண்ட் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 20 நாட்களாக நவீன் குமார் செல்போனில் லாவண்யாவைத் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், லாவண்யா நவீனின் அழைப்பைத் தவிர்த்துள்ளார். படிப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நவீன் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று காலை சிதம்பரம் வந்துள்ளார். ஒரு கடையில் வயலுக்குத் தெளிக்கும் மருந்தையும், கூல் டிரிங்க்ஸும் வாங்கிக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக கேம்பசுக்குள் வந்து காத்திருந்துள்ளார். விடுதியிலிருந்து வந்த மாணவி லாவண்யா வருவதைப் பார்த்ததும், நவீன்குமார் தான் வாங்கி வந்த மருந்தை கூல்டிரிங்க்ஸில் கலந்து குடித்துவிட்டு. பிறகு தான் வைத்திருந்த கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு லாவண்யாவிடம் பேசியுள்ளார்.
லாவண்யாவிடம் ஏன்? ”எனது அழைப்புகளை எடுக்கவில்லை? நீ ஏன் செல்போனில் கூப்பிடவில்லை? என்னைப் பிடிக்கவில்லையா?” என ஆத்திரத்துடன் கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடவே. அப்போது நவீன், “நான் விஷம் குடிச்சிட்டு வந்திருக்கேன். சீக்கிரம் சாகப்போறேன். நீயும் உயிரோட இருக்கக் கூடாது” என்று லாவண்யா கழுத்தை அறுத்துள்ளார்.
நவீனின் கோபத்தை அறிந்த லாவண்யா தைரியமாக கத்தியைத் தடுக்க முயன்றபோது இரு கைகளின் உள்ளங்கையிலும் கத்தி பட்டு ரத்தம் அதிகமாக வந்துள்ளது.
போலீஸார் விசாரணையில் நவீன், ”நானும் லாவண்யாவும் கடந்த 7 வருஷமா காதலிச்சோம். நான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன். லாவண்யா ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள். நாங்க பள்ளியிலிருந்தே ஒண்ணாப் படிச்சோம். அந்த சமயத்திலிருந்தே எங்களுக்குள் காதல் வந்தது. நாங்கள் ஒருநாள் கூட பேசாமல் இருந்ததே இல்ல. ஆனா, என்ன பிரச்சனைன்னே தெரியல; கொஞ்சம் நாளா லாவண்யா என்கூட பேசல. நான் பேசினாலும் அவ சரியாகப் பேசாமல் இருந்தாள். எனவே, நேரடியாகப் பேசிவிட்டு இருவரும் சாக வேண்டும் என முடிவுசெய்து வந்தேன்” என கண்கலங்கியபடியே கூறியுள்ளார்.
ஆபத்தான நிலையிலிருந்த லாவண்யாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ”இருவரும் காதலித்தோம். எனக்கு வேலை அதிகமாக இருந்ததால் சரியாகப் பேசமுடியவில்லை. அவர் விஷம் குடித்திருக்கிறார். தயவு செஞ்சி அவரைக் காப்பாற்றுங்க” எனக் கதறியபடி கூறியுள்ளார். அந்தச் சூழலிலும் தனது கழுத்தை அறுத்த காதலனின் உயிரைப் பற்றி அவர் அக்கறையுடன் பேசியது டாக்டர்களையும் போலீஸாரையும் நெகிழவைத்தது.
