காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மதுரையில் , விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதில், பலர் காயமடைந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பல இடங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து சமைத்து சாப்பிடுவது, குடும்பம் நடத்துவது போன்ற போராட்டங்களும், ஆடு, மாடுகளை கட்டி வைத்து மேய்ச்சலுக்கு விடுவது போன்ற போராட்டமும் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமாகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் மு.க.ஸ்டாலின், வைகோ, முத்தரசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டம் நடத்த ஏராளமான விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும் திரண்டனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டக்கார்ர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால், போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.