சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரமம் இழுத்து மூடப்பட்டதால், பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, நடத்தி வரும் ஆஸ்ரமம் பள்ளிகளில் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல மாதங்களாக சம்பள வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

சென்னை, ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி சங்கம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர். ராகவேந்திரா ஆஸ்ரமம், வெங்கடேஸ்வரலு என்பவரின் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.

பள்ளி கட்டட வாடகை, 5 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய், வாடகை பாக்கி உள்ளதாகவும், அதனால் கட்டடத்தைக் காலி செய்ய சொல்லியும் நிலத்தின் உரிமையாளர் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஸ்ரமம் பள்ளி கட்டடத்தை காலி செய்ய சொல்லி அங்கு படிக்கும் மாணவர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியானது. 

மேலும், வெளியேற்றப்பட்ட மாணவர்கள், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.