தஞ்சாவூர்

நில பத்திரங்களை பிடுங்கி வைத்து கொண்டு ரூ.3 இலட்சம் இலஞ்சம் கேட்ட தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் நடவடிக்கை எடுக்க காத்திருக்கின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்கிரகாரத்தைச் சேர்ந்தவர் ஜோசப்பின் மகன் அந்தோணிசாமி. பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். 

இவர் தஞ்சாவூர் மேலவீதியில் நிதி நிறுவனம் நடத்திவரும் சந்திரனிடம் 2016-ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகளில் ரூ.10½ இலட்சம் கடன் பெற்றுள்ளார். அந்தப் பணத்திற்கு ஈடாக தனது நண்பர்களின் நிலங்கள் தொடர்பான நான்கு பத்திரங்களை சந்திரனிடம் அந்தோணிசாமி அடமானம் வைத்தார். 

அதன்பின்னர் அவர், கடனை படிப்படியாக வட்டியுடன் திரும்பி செலுத்தி வந்துள்ளார். வட்டியுடன் சேர்த்து ரூ.12½ இலட்சம் செலுத்தியவுடன் தனது பத்திரங்களை தரும்படி அந்தோணிசாமி கேட்டார். ஆனால், இன்னும் பணம் கொடுத்தால்தான் பத்திரங்களை திரும்பி தருவேன் என்று சந்திரன் கூறியுள்ளார்.

இதனால் அந்தோணிசாமி அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் மனு கொடுத்தார்.  அந்த மனு குறித்த விசாரணையை நடத்தும்படி தஞ்சாவூர் நகர துணை காவல் கண்காணிப்பாளருக்கு அவர் அனுப்பி வைத்தார்.

அந்த மனுவை தஞ்சாவூர் மேற்கு காவல் ஆய்வாளர் ஜோதிமகாலிங்கத்திற்கு பரிந்துரை செய்ததார் தஞ்சாவூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த ம்படி இரு தரப்பினரையும் மேற்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து ஆய்வாளர் ஜோதிமகாலிங்கம் விசாரணை நடத்தினார். 

அப்போது அவர், ரூ.1 இலட்சத்துடன் மற்றொரு பத்திரத்தை சந்திரனிடம் கொடுக்க வேண்டும் என்று அந்தோணிசாமியிடம் கூறினார். மேலும், சந்திரனிடம் அடமானம் வைக்கப்பட்ட நான்கு பத்திரங்களையும் ஆய்வாளர் பெற்றுக்கொண்டார்.

இந்த பத்திரங்களை அவர், அந்தோணிசாமியிடம் காட்டி, அந்த பத்திரங்களை பெற்று கொண்டதாக அந்தோணிசாமியிடம் ஒரு காகிதத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். ஆனால் அந்த பத்திரங்களை அந்தோணிசாமியிடம் ஒப்படைக்கவில்லை. 

பத்திரங்களை கேட்டபோது, "தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் தெற்கு அலங்கத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் 105-வது அறையில் தான் தங்கியிருப்பதாகவும், அந்த அறைக்கு வந்து பத்திரங்களை வாங்கி கொள்ளும்படியும்" ஆய்வாளர் ஜோதிமகாலிங்கம், அந்தோணிசாமியிடம் கூறினார்.

அதன்படி தனியார் தங்கும் விடுதிக்கு சென்ற அந்தோணிசாமி, காவல் ஆய்வாளரை சந்தித்தார். அப்போது அவர், "பத்திரத்தை கொடுப்பதற்கு தனக்கு பணம் தர வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனை எதிர்பார்க்காத அந்தோணிசாமி தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். 

அதை பெற்றுக்கொண்ட ஆய்வாளர், ஒரு பத்திரத்தை மட்டும் கொடுத்துள்ளார். மேலும் மூன்று பத்திரங்களை கேட்டபோது இன்னும் ரூ.3 இலட்சம் இலஞ்சம் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக் கொள் என்று கூறியுள்ளார். 

இலஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணிசாமி, தஞ்சாவூர் இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் ஜோதிமகாலிங்கம் இலஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடிப்பதற்குஈலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் முடிவு எடுத்தனர்.

அதன்படி, கடந்த சில நாட்களாக அவரை கண்காணித்து வந்தனர். ஆனால் அவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக சென்றுவிட்டார். 

அதன்பின்னர் சென்னையில் காவல் தொடர்பான பயிற்சி முகாமுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆய்வாளர் ஜோதிமகாலிங்கத்தை பிடிக்க முடியாமல் போனது. 

இந்த நிலையில் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்திற்கு இலஞ்ச ஒழிப்பு காவலாளார்கள் சென்று அங்கு பணியில் இருந்த காவலாளர்களிடம் விசாரித்தனர். 

அப்போது அந்தோணிசாமி அடகு வைத்த பத்திரங்களை ஆய்வாளர் ஜோதிமகாலிங்கம் வாங்கிக் கொண்டதும், அதை அவரிடம் ஒப்படைக்காமலேயே கையெழுத்து வாங்கக் கொண்டதும் தெரியவந்தது. 

இதன்பின்னர் ஆய்வாளர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்த அறை கதவை யாரும் திறந்துவிடக் கூடாது என்பதற்காக இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் நேற்றுமுன்தினம் இரவு அறைக்கு சீல் வைத்தனர். 

ஆய்வாளர் ஜோதிமகாலிங்கம் முன்னிலையில் அறை கதவை திறந்து சோதனை நடத்த காவலாளர்கள் திட்ட மிட்டனர்.  இந்த நிலையில் ஆய்வாளர் ஜோதிமகாலிங்கம் மீது இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். 

இதனையடுத்து ஜோதிமகாலிங்கத்தை வரவழைத்து விசாரணை நடத்த காவலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள அறையை அவர் முன்னிலையில் திறந்து சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையின் முடிவில் மேலும் விவரங்கள் தெரியவருவதுடன் ஆய்வாளர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் தெரிவித்தனர்.