சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் இல்லம் உள்ளது. அதன் அருகில் உள்ள வீட்டில் வசித்தவர் சாந்தி (65). இவருக்கு திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார். வீட்டில் வேலைக்காரர்கள் தவிர, வேறு யாரும் உடன் இல்லை. வேலைக்காரர்களும், வேலை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் பால் போட வந்த பால்காரர், பால் வாஙக சாந்தி வராததாலும், வீட்டின் கதவு திறந்து கிடந்ததாலும், சந்தேகமடந்து உள்ளே சென்று பார்த்தார். சாந்தி, சடலமாக கிடந்தது தெரிந்தது. இதையடுத்து அவர், மற்றவர்களுக்கு தெரிவிக்க, பொதுமக்களின் புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கொலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

சாந்தி, வீட்டில் தனியாக இருந்ததால், வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த கொலை நகைகளை கொள்ளையடிக்க நடந்ததாக தெரியவில்லை. காரணம் சாந்தி, நகை மற்றும் பணம் எதையும் வீட்டில் வைக்கவில்லை. அனைத்தையும் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சாந்தி எதற்காக கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சனை ஏதும் பின்னணியில் உள்ளதா என்பது அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும்.

வசதியானவர்கள், திரையுலக பிரபலங்கள் வசிக்கும் அபிபுல்லா சாலையில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.