திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நேற்று போலீஸ் சீருடை அணிந்த ஒரு பெண் மயங்கி கிடந்தார். அங்கிருந்த பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் உடல் நிலை சரி இல்லாமல் இருக்கலாம் என கருதி அவரை எழுப்பினர்.

ஆனால் அவரால் எழுந்து உட்கார முடியவில்லை. அப்போதுதான் அவர் நல்ல போதையில் இருந்தது தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் உடமைகள் கீழே சிதறி கிடந்தன. அதனை எடுத்து அவரிடம் கொடுத்து ஆட்டோவில் ஏற்ற முயன்றனர்.

இதையடுத்து போதையில் இருந்த அவர் பயணிகளை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரது செல்போன் மூலம் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஆய்வு பணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வந்தார். புறக்காவல் நிலையத்தில் போலீசார் யாரும் இல்லாததைக் கண்டு விசாரித்தார்.

பணியில் இருக்க வேண்டிய பெண் போலீஸ் உடல்நிலை சரி இல்லாமல் சென்று விட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குடிபோதையில் கிடந்த பெண்ணின் மகன் அங்கு வந்து அவரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து இவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தார்.

மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில் தற்போது போலீஸ் சீருடையிலேயே குடிபோதையில் மயங்கி கிடந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.