சென்னை தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 36 பேர், 7 முதல் 8 குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் கொழுக்குமலை-குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்ட 4 பேர் சென்றுள்ளனர்.

அப்போது மாலை 4 மணியளவில் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 40 பேரும் சிக்கினர். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இரவு நேரத்தில் மீட்புப்பணிகளை தொடர முடியாததால், மீட்புப்பணி மீண்டும் காலையில் தொடங்கியது. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ, நேற்று பற்றியதல்ல. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தீப்பற்றி காடு எரிந்து வருகிறது. தேவாரம், பொட்டிபுரம் காட்டுப்பகுதிகளும் ஒரு வாரமாக எரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 30 கிமீ பரப்பிலான காடு எரிந்து நாசமாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தீ பற்றி எரிந்தும் வனத்துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. தேனி காட்டுப்பகுதிகள் ஏற்கனவே தீக்கிரையாகும் நிலையில், அனுமதி இல்லாமல் மலையேற்றப்பயிற்சியில் ஈடுபட்டதும் மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்தும் வனத்துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியையும் மக்களிடையே ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.