நீலகிரி

நீலகிரியில் கிராம மக்களை அச்சுறுத்தும் ஒற்றை முரட்டு காட்டு யானையை விரட்ட முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் களமிறங்கி உள்ளன..

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பாக்கனா கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை மக்களைத் தாக்கியும், பயிர்களை தின்றும், நடந்தும் அவற்றை நாசம் செய்தும் பெரும் நட்டத்தையும் சிரமத்தையும் கொடுத்து வருகிறது.

இந்த ஒற்றை யானையை காட்டுப் பகுதிக்குள் துரத்த வனத்துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சித்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. 

எனவே அப்பகுதி மக்கள் யானையிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

அதனையடுத்து, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சேரன், முதுமலை ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. கும்கி யானைகள் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.