ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகங்கள் செல்ல கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் வாகங்கள் செல்ல கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை அம்மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது. ஓசூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஐந்து இடங்களில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் சுதந்திரமாக செல்ல ஏதுவாக இந்த வாகனத் தடையை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓசூர்-கோதூர் சந்திப்பு முதல் டிவிஎஸ் வரை, மத்திகிரி சந்திப்பு முதல் அந்திவாடி வரை, முத்துமாரியம்மன் கோயில் முதல் வெண்ட் இந்தியா வரை, சப் கலெக்டர் அலுவலகம் முதல் மத்திய கலால் அலுவலகம் வரை, பத்தலப்பள்ளி மார்க்கெட் முதல் காளிகாம்பாள் கோயில் வரை ஹட்கோ காவல் நிலையம் வரை வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

எனினும், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர ஊர்திகள் இயக்க அனுமதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் கூறுகையில், யோகா, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் மும்பையில் போலீசார் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து இதுபோன்ற முயற்சியை துவக்கியுள்ளனர். இதேபோல் ஓசூரிலும் அடுத்த ஞாயிறு முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓசூரில் குற்றங்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் ஒவ்வொரு குழுவிலும் 12 போலீசார் வீதம் நான்கு தனிப்படைகள் ரோந்து பணியில் ஈடுபடும். இரண்டு குழுக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்தார். இதுக்குறித்து ஓசூர் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.துரை கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் யோசனை நன்றாக தான் உள்ளது. ஆனால், இந்த ஐந்து இடங்களில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து மாற்றம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. குடியிருப்பாளர்கள் தங்களுடைய காலை நடைப்பயணம் மற்றும் ஜாகிங் மற்றும் யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
